Thursday, October 22, 2009

[சமூகம்] வன்முறையின் வாசற்படி

ஆனந்த விகடனில் சிம்புவின் பேட்டி. பி.எம்.டபுள்யு x6 காரில் ஈ.சி.ஆரில் 220 கி.மீ வேகத்தில் போய் இருக்கிறேன் என்பதை பெருமையாக பறைசாற்றும் பேட்டி. இந்த பேட்டியில் இருக்கும், ஆணவமும், அகங்காரமும் எத்தகையது என்று சொல்ல தேவையில்லை. ஈ.சி.ஆரில் அதிக பட்சம் 80 - 100 கி.மீ போகலாம் என்று நினைக்கிறேன். இந்த வேக லிமிட் கூட வழி நெடுக இருக்கக்கூடிய கிராமங்கள் அதில் வாழும் மனிதர்கள்தான். ஈ.சி.ஆர் விபத்து அதிகமாக நடக்கும் பகுதி. 220 கி.மீ வேகத்தில் போகும் ஒரு காரால், நடுவில் ஒரு மனிதரையோ, விலங்கையோ பார்த்து சடாலென ப்ரேக் போட முடியுமா? அந்த வேகத்தில், எவர் மேலாவது இடித்து உயிர் இழப்பு ஏற்பட்டிருந்தால், இவர் 220 கி.மீ வேகத்தில் ஓட்டினேன் என்று சொல்லியிருப்பாரா ? இல்லை, டெல்லி/மும்பாயில் நடப்பது போல சாலையோரங்களில் படுத்து கொண்டிருப்பர்களின் மீது வண்டியேற்றி கொல்லுவது ஒரு பணக்கார விளையாட்டா? இவரை பார்த்து முட்டாள் ரசிகர்கள், "தலீவர் போறா மாதிரி நாமளும் போவோம்"னு வேக விளையாட்டில் ஈடுபட்டு உயிரை விட்டால், யார் பொறுப்பு? குறைந்த பட்ச சமூக அக்கறை இருக்கும் எவராவது இவ்வளவு வேகமாக போவார்களா? எந்த தைரியத்தில் ஆ.விகடன் இதை சிம்புவின் பேட்டியாக வெளியிடுகிறது? This is a written, documented statement.

"கற்றது தமிழில்" ஒரு வசனம் வரும். "இந்த ஊர்ல இரண்டே பேர் தான் இருக்கறான். ஒருத்தன் ஸ்பென்சர் பளாசாக்கு உள்ளே இருக்கறான். இன்னொருத்தன் வெளியே இருக்கறான். சத்யம் தியேட்டருக்கு உள்ளே இருக்கறவன், வெளியே இருக்கறவன்" மேற்சொன்ன மாதிரி சம்பவங்கள் இந்த விரிவினை பள்ளத்தாக்காக மாற்றும் முயற்சிகள். இந்த divide/imbalanced growth ஏன் இன்னமும் ஆள்பவர்களுக்கும், ஊடகங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் புரியாமல் இருக்கிறது. அதிக பட்ச பணம் வைத்திருந்தாலும், அதை ஊதாரித்தனமாக வெளிப்படுத்துவதும் கூட சமூகத்தின் மீதான வன்முறையே. சமூகம் என்பது தனிமரமல்ல, அது மிகப்பெரிய தோப்பு. தோப்பில் ஒரே மரம் செழிப்பாய் இருப்பதும், மற்ற மரங்கள் உயிர்வாழ தண்ணீருக்காக கூட தவமிருப்பதும் நடப்பதில்லை.முகேஷ் அம்பானி 6000 கோடி ரூபாய்க்கு வீடு கட்டுகிறார். மனைவிக்கு பிறந்த நாள் பரிசாக ஜெட் வாங்கி கொடுக்கிறார். அம்பானி நிலைமை அப்படி. கோவம், எரிச்சல், கையலாகததனம் என எல்லாம் சேர்ந்து வருகிறது.

விளைவு, இதை 10000 பேர் படிக்கிறார்கள்.1000 பேர்கள் யோசிக்கிறார்கள். 100 பேருக்கு இவனுங்களுக்கு மட்டும் எங்கிருந்து இவ்வளவு காசு, அதிகாரம், ஆணவம், தெனாவெட்டுன்னு நினைக்கிறான். 10 பேருக்கு அவங்க மேல பொறாமை வருது. கோவம் வருது. எரிச்சல் வருது. ஒருத்தனோ ரெண்டு பேரோ அதனாலேயே மாறான், கொலை பண்றான், கொள்ளையடிக்கிறான், திருடறான். வன்முறைக்கு அடிப்படை காரணம் வெறும் கோவம் மட்டுமல்ல, அது வேறுவிதமான வன்முறை. பண்பட்டவர்கள், சீர்தூக்கி பார்க்கிறவர்கள், மத்தியதர வர்க்கமென இதை கண்டும் காணாமலும் போயிடறாங்க. இது வெறியா, கோவமா, அவமானமா, நம்மால முடியலையே, அவன் மட்டும் அனுபவிக்கிறானேன்னு மாறும்போது உள்ளேயிருக்கற வன்முறை வெடிக்குது. பங்காளி சண்டை முதல், பார்டரில் நடக்கும் சண்டை வரைக்கும் எல்லாவற்றுக்குமான அடிப்படை இதுவாக தான் இருக்கமுடியும்.சிவாஜியில் ஹனிபா ஒரு வசனம் சொல்லுவார் "எதிரிங்க அவங்களா உருவாறதில்லை, நாம தான் உருவாக்கறோம்" அது தான் இங்கே நடக்கிறது.

30 கோடி பேர் ஒரு வேளை சோத்துக்கு லாட்டரி அடிக்கும் இதே நாட்டில் தான், ஒரு கோடி ரூபாய்க்கு கார்கள் எளிதில் விற்பனையாகின்றன. எவ்வளவு பெரிய அவமானம் இது. இந்த நாடு கம்யுனிஸ்டு நாடாக மாற வேண்டும் என்று கேட்கவில்லை;அது ஆகவும் ஆகாது என்பது வேறு விஷயம். ஆனால், குறைந்த பட்ச தேவைகள் கூட நிறைவேறாத ஒரு பெரும் ஜனத்தொகை இங்கே இருக்கிறது.அவர்களை பற்றிய எந்தவிதமான பிரக்ஞை கூட இல்லாத, ஒரு பிளாஸ்டிக் சமூகமாக நாம் மாறிக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது. 1000ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் ஒரு பக்கெட் இலவசம் என்று போட்டால் வாங்கும் இதே மத்திய வர்க்கம் தான், இலவசமாய் ஒரு மானியத்தினை ஏழை விவசாயிக்கு கொடுக்கும்போது, meritocracy பேசுகிறது.ரேஷன் கடையில் துவரம்பருப்பு 32ரூபாய்க்கு தருகிறார்கள் என்று தெரிந்ததும், வாசலில் ஹோண்டாக்களும், டொயோட்டாக்களும் நிற்கின்றன, இது தான் meritocracy-இன் இன்றைய லட்சணம்.

ஒரு பக்கம் படத்துக்கு கோடி கோடியா வாங்குகிற நடிகர்கள், திட்டங்களில் ஆயிரக்கணக்கான கோடிகளில் ஊழல் பண்ணுகிற அதிகாரிகள்/அரசியல்வாதிகள், இன்னொரு பக்கம் நம்மிடம் இருக்கும் காசு எப்படியாவது 36% வட்டி கிடைக்கும்னு நினைத்து ஏமாறும் அப்பாவிகள். எவ்வளவு ஒரு கேடு கெட்ட சமூகமாக நாம மாறி வருகிறோம். 36% வட்டி கொடுக்கிறேன் என்று எல்லா நாளேடுகளிலும் விளம்பரம் செய்யும் ஒரு நிறுவனத்தினை ஏன் அரசாங்கமோ, நீதிமன்றமோ உடனடியாக கேள்வி கேட்பதில்லை. இறுதியில் எல்லாரும் பனகல் பார்க்கில் வட்டமாக உட்கார்ந்து கொண்டு, அசோசியேஷன் வைத்து கொண்டு உயர்நீதிமன்றம் நோக்கி பிரார்த்தனை பண்ண வேண்டியதுதான்.

சத்யம் ராஜுவுக்கு A கிளாஸ் சிறை. பாவம், கட்டமுடியாமல் போன 25000 கடனுக்காக காசோலை வாங்கி, அதையும் பவுன்ஸ் செய்து, Section 138-இல் உள்ளே போகும் ஒரு அபாக்கியசாலிக்கு அலுமினிய தட்டும், நீர்த்த் சோறும். எது வன்முறை? ஒரு ஜென் மொழி ஒன்று உண்டு. "ஆயுதங்களால் என்றைக்குமே பயங்களில்லை,அது யார் கையில் இருக்கிறது என்பதுதான் பயமே" என்று. அரசின் பூடகமான இரட்டைநிலை வன்முறைக்கும், சிம்பு மாதிரியான அதிகாரம், தோரணையோடு இருக்கும் நபர்களின் உள்ளார்ந்த வன்முறைக்கும் வித்தியாசம் scale of operation மட்டுமே.

பணக்காரனோட சமூக அக்கறை 10000 ரூபா ஒரு அனாதை ஆசிரமத்துக்கு எழுதறதோட முடிஞ்சி போச்சு. மத்தியதர வர்க்கத்தோட சமூக அக்கறை பழைய துணி குடுக்கறதோடவோ, பள்ளிக்கூடங்கள்ல குழந்தைகள் கொண்டு வர்ற ஹெல்ப் ஏஜ் இந்தியாவுக்கு 100 ரூபா குடுக்கறதோட முடிஞ்சாச்சி. அரசியல்வாதிகள், அதிகாரிகள் பத்தி சொல்லவே வேண்டாம். நாம ஒரு மோசமான civil unrest நோக்கி போயிட்டு இருக்கோம். டிவி சீரியல்கள், மசாலா படங்களும், நம் அரசியல்வாதிகளின் அறிக்கை போர்களும் இப்போதைக்கு அதை தள்ளிப் போட்டு கொண்டிருக்கிறது. வடகிழக்கிலும், கிழக்கிலும் அதில்லை, அதனால் அந்த unrest அப்பட்டமாக தெரிகிறது. வித்தியாசம் அவ்வளவுதான். சென்னையில் சமீபத்தில் நடந்த கொலைகள் பற்றி விஸ்தாரமாக படித்துப் பாருங்கள், நான் சொல்வதின் தீவிரம் புரியும். வெறும் டீக்குடிப்பதில் ஆரம்பித்து பனையூர் கொலைகள் வரை எல்லாவற்றுக்குமான அடிப்படை காரணம் எது? சமூக ஏற்றத்தாழ்வுகள் தான். பரவலாய் நாம் அனைவரும் கடுமையான சமூக மன அழுத்தத்தில் வாழ்ந்து வருகிறோம். அடக்க முடியாமல் பீரிட்டு வெளியேறும்போது அசாம்பாவிதங்கள் நடக்கின்றன. இதிலிருந்து நீங்களும் நானும் கூட தப்பமுடியாது என்று தோன்றுகிறது.

7,300 கோடி ரூபா இந்திய அரசாங்கம் வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ பயங்கரவாதத்தை அடக்க செய்யும் செலவு என ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இதில் 10% முன்பே கட்டமைப்பிற்கும் கல்விக்கும் அங்கே நாம் செய்திருந்தால், இவ்வளவு வன்முறையும், உயிர்பலியும் நடந்திருக்குமா ? வன்முறை, உயிர்பலி எல்லாம் பூகம்பம் மாதிரி. ஒரே நாளில் உட்கார்ந்து யோசித்து வெடிக்கிற விஷயமில்லை. காலங்காலமாக, கொஞ்சகொஞ்சமாய் மக்கள் மனதில் ஏற்படும் மாற்றங்கள், வன்மமாய் மாறி, ஒரு நாள் கொலையாய், தற்கொலை படை முயற்சியாய், தாக்குதலாகவோ முடிகிறது. இதன் தீர்வு கண்டிப்பாக ப.சிதம்பரம் சொல்வது போல ஆயதங்களோ, ஆர்மியோ அல்ல, அதனால் இன்னமும் வன்முறை பல்கி பெருகதான் செய்யும்.

பெளத்தத்தை போற்றும் ஊரிலேயே எத்தனை வன்முறைகள். அது ஜப்பானாய் இருந்தாலும் சரி, இலங்கையாய் இருந்தாலும் சரி. நெருப்பு வன்முறை எனக் கொண்டால், நீரூம் வன்முறையே. சுரணையில்லாத சமூகமும், திருப்பிக் கொடுக்காத கடனும் எந்நாளும் பிரச்சனையே. கொலை எதற்கும் தீர்வல்ல என்று இன்றளவும் தீர்க்கமாக நம்புகிறேன். ஆனால், ஒரு பக்கத்தில் அரசின் வன்முறை, இன்னொரு பக்கம் மாவோயிஸ்டுகள் என வாழும் மக்கள், காந்திய வழியை பின்பற்றினால், உயிரோடு இருப்பதற்கான எவ்விதமான சாத்தியங்களும் இல்லை என்றுதான் தோன்றுகிறது.வடகிழக்கு மாநிலங்களில் "சல்வா ஜுதும்" பண்ணும் அட்டகாசங்கள், உயிர்பலிகள், பயங்கரவாதிகள் என்று அரசு அடையாளம் சொல்லும் ஆட்கள் செய்யும் அக்கிரமங்களை விட அதிகமாக இருக்கிறது. இதை எப்படி தடுப்பது?. வன்முறைக்கு பதில் வன்முறையில்லை என்பது நல்ல தியரி, ஆனால் நிகழ்காலத்தில்?? இந்த அடிப்படை புரியாத வரைக்கும் வன்முறையினை எந்த காலத்திலும் ஒழிக்க முடியாது.

எங்கோ ஆரம்பித்து, எங்கோ போய்விட்டது பதிவு. சிம்புவின் இந்த ஆ.வி பேட்டியினை வைத்துக் கொண்டு சிம்புவின் மீது வழக்கு தொடர முடியுமா? வலையுலகில் யாராவது சமூக அக்கறையுள்ள வழக்குரைஞர்கள் இருந்தால் ஒரு PIL போடுங்கள். இனிமேலாவது பொறுப்பில்லாமல் பேசும் இம்மாதிரியான நடிகர்கள், கொஞ்சம் வாயையும் .................யும் மூடிக் கொண்டு இருக்கட்டும்.

Thursday, September 17, 2009

[சமூகம்] வரவு எட்டணா, செலவு பத்தணா

சோனியா எகானமி கிளாஸில் போகிறார். ராகுல் காந்தி ரயிலில் போகிறார். பிரணாப் முகர்ஜி எகானமி கிளாஸில் போய்க் கொண்டு, சசி தரூரையும், கிருஷ்ணாவையும் அய்ந்து நட்சத்திர விடுதியிலிருந்து விரட்டுகிறார். சசி தரூர், எகனாமி கிளாஸினை மாட்டு கொட்டகை என்று சொல்லுகிறார். கேக்கறவன் கேணப்பயலா இருந்தா கே.பி.சுந்தராம்பாள் ஜீன்ஸ் போட்டுட்டு வந்தாங்கன்னு சொல்லுவாங்க அந்த கதை இது.

முதலில் இந்த எகானமி கிளாஸ் ஜோக்கு.உதாரணத்துக்கு ஏதாவது ஒரு மந்திரி எ.கியில் போகிறார் என்றால், விமான பணிப்பெண்கள் அவரை விழுந்து விழுந்து கவனிப்பார்கள், மத்த பயணிகளின் சேவைக்கு எள்ளு. எகனாமி கிளாஸில் தானே போகிறோம் என்று ஒன்று விட்ட சித்தப்பா பையன் முதற்கொண்டு எல்லாரையும் ஏற்றி போவார்கள்.காந்தியின் எளிமை பற்றி பேசும் போது ஒரு கதை சொல்லுவார்கள். காந்தி எங்கே போனாலும், ஆட்டுப்பால் தான் குடிப்பாராம். இதனால், அவர் எங்கே போனாலும் ஒரளவுக்கு நன்றாக பால் தரும் ஒரு ஆட்டினை பிடித்து கட்டவேண்டும். இல்லையென்றால் கூடவே ஒரு ஆட்டினை கொண்டு போக வேண்டும். அந்த மாதிரி இவர்கள் ரயிலில் போனார்கள் என்றால் 37வது வட்ட அடிமட்ட தொண்டன் வரை சென்ட்ரலிலோ, எழும்பூரிலோ வான வேடிக்கைகளோடு வரவேற்க்கும் வைபவங்கள் நடக்கும்.

இந்த நாட்டில் எது எதற்கோ எவ்வளவோ செலவு செய்கிறோம்.தேசிய கட்டாய கிராம பணித்திட்டத்தில் (NREGS)தரப்படும் ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கும் வெறுமனே 30-40பைசா தான் கடைக்கோடியில் இருப்பவனுக்கு போய் சேருகிறது. உங்களின் சிக்கன நடவடிக்கைகள் அங்கே காட்டுங்கள். அதனை 70பைசாவாக மாற்ற என்ன தேவை என்று யோசியுங்கள்.

மாயாவதி மாதிரி முட்டாள்தனமாக தனக்கும், தனனை சார்ந்தவர்களுக்கும் சிலை வைத்து கொண்டு சீன் போடும் நாடகங்களை குறையுங்கள்.உரூவ ரூபமாக இருக்கும் கடவுளை எதிர்த்து நடுரோட்டில் போட்டு உடைத்த பெரியாரினையே சிலை வடிவாய் எல்லா இடங்களிலும் பார்க்க முடிகிறது. அதை விட கொடுமை, அந்த சிலைக்கு மாலை போட்டு வண்ங்கி வேறு போகிறார்கள்.அது வேறு கதை, இதற்கு கடவுள் நம்பிக்கையே பெட்டர்.

அரசு எடுக்கும் விழாக்களில் செலவுகளை குறையுங்கள். வினைல் போர்ட்டும், கட்-அவுடுமாய், ஜெகஜோதி விளக்குகளோடு ஒரு அடிக்கல்லினை நட்டுப்போக நடக்கும் கூத்துக்களில் இருக்கும் செலவீனங்களை குறையுங்கள். தன்னுடைய ஆட்சி தான் சிறந்தது என்று எல்லா முதலைமச்சர்கள் ஆங்கில, பிராந்திய ஏடுகளில் 3 முழு பக்கம் அரசு செலவில் விளம்பரம் கொடுப்பதை நிறுத்துங்கள். ஏ.சி கோச்சில் பயணித்து கொண்டு சென்னை-பெங்களூர் போக 6 மணி நேரம் எடுத்து கொண்டு, தண்டமாய் கூட்டாளிகளோடு சீட்டாடுவதற்கு பதில், விமான பயணம் ஒன்றும் செலவல்ல.Bring in more accountability to MPs rather than getting into austerity measures, which is neither going to improve topline or bottomline of this country.

எகானமி கிளாஸில் பயணித்தால் மட்டும் இங்கே எதுவும் மாறிவிடாது.இதெல்லாம் சுத்த ஹம்பக். போய் வேலையை பாருங்கப்பா... இவங்க எப்பவுமே இப்படித்தான்.... அய்ய்ய்யோ, அய்ய்ய்யோ.

சீரியஸாக ஒன்று, சமீபத்தில் என்னை கவர்ந்த தளம் இது தான்: www.rtination.com எனக்கு தெரிந்து சமூக ஊடக வெளியில்(Social Media) இந்தியாவிற்கு தேவையான மிக முக்கியமான தளமாக இதனை நம்மால் மாற்ற முடியும். எல்லாவற்றையும் கேள்வி கேட்போம், கேட்டாலேயொழிய இங்கே எதுவும் கிடைக்காது.கேளுங்க, கேளுங்க, கேட்டுக்கிட்டே இருங்க.....

Tuesday, June 16, 2009

உருப்படாத 32

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

”உருப்படாதது” என்பது நான் சுயமாக வைத்த பெயர். வாழ்க்கையில், தமிழில் இருக்கும் ஏதேனும் ஒரு வார்த்தையையாவது அதன் அர்த்தத்தினை தாண்டி, வேறொரு அர்த்தம் தொனிக்க செய்ய வேண்டும் என்பது தான் கனவு. உருப்படாதது என்று சொன்னாலும், ஒரளவுக்கு உருப்படியாய் எழுதியிருப்பதாக தோன்றி இருக்கிறது. கண்டிப்பாக இந்த பெயரினை பிடித்து தான் வைத்தேன். மற்றபடி நரெய்ன் என்கிற பெயரின் மீது ஒரு காதல். தண்ணீர்குளம் சாரங்கராஜன் ராஜகோபாலன் லஷ்மிநாராயணன் என்று சொல்லி முடிப்பதற்குள் ஆயுள் குறையும் வாய்ப்புகள் அதிகம் என்பதாலும் :)

2) கடைசியா அழுதது எப்போது?

சமீபத்தில் அழவில்லை. ஆனால் காதலுக்காகவும், நல்ல திரைப்படங்களின் முடிவுகளுக்காகவும் பல சமயங்களில் அழுதிருக்கிறேன். கடைசியாக அழுதது என்றால், காதல் திரைப்படம் பார்த்து கிளைமேக்ஸில் கண்களில் நீர் தென்பட்டதாக நினைவு. ஆனால் நெஞ்சு விக்கித்தது நிறைய.

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

பிடித்திருந்தது ஒரு காலத்தில். எப்போது கணினி தொட்டேனோ அப்போதிலிருந்து, வங்கி காசோலையில் கையெழுத்து போடுவதினை தவிர வேறெதுவும் எழுதுவதில்லை. தொடு திரை செல் பேசி இருப்பதால் மற்ற விவரங்கள் எவ்வளவு கேவலமாக எழுதினாலும், நோக்கியா மன்னித்தருளி தெளிவாக தருகிறது.

4) பிடித்த மதிய உணவு?

நான் ஒரு சாப்பாட்டு ரசிகன். பல இடங்களில் பல விஷயங்கள் பிடிக்கும். சஞ்சீவனத்தில் ராஜகீயம் முழுச் சாப்பாடு. செனடாப் ரோட்டின் தாபாவின் பஃபே.பாரிஸ் கார்னரில் குஜராத்தி மண்டலில் கிடைக்கும் சப்பாத்திகள்.தி.நகர் மன்சூக்கின் ராஜஸ்தானி உணவு. தாஜ் மவுண்ட்ரோடின் பியாண்ட் இண்டஸின் அளவற்ற அசைவ உணவு.

5) நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?

ஆணா, பெண்ணா என்பதை பொறுத்து :) ஆனால் கூடுமான வரையில் கொஞ்சம் வெளி ஆசாமி. அதனால் நட்போடு இருப்பது என்பது ஒரு பெரிய விஷயமில்லை. எனக்கு நட்பு ரீதியில் பல கேங்குகள் உண்டு. காசிமேட்டில் சில்லறை அடாவடியில் ஈடுபடும் ஆட்களிலிருந்து, நுனி நாக்கு அமெரிக்க ஆங்கிலம் பேசும் மேதாவிகள் வரை எல்லா வகைகளிலும் நட்புகள் உண்டு.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?

சென்னைவாசி. அருவியில் ஒரே ஒரு தடவை குளித்திருக்கிறேன். கடலில் தலை நனையாமல் குளிக்க பிடிக்கும்.

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

பேசும் விதம். மானரிசஸங்கள். ஒரளவுக்கு என்னால் 15 நிமிடத்தில் ஒருவர் பேசும் விதத்தித்தினை வைத்தே அவர் என்ன மாதிரியான ஆள் என்பதை கணிக்க முடியும். பெண்களோடு பேசுவது மிகக் குறைவு, அதனால் கணிக்கிறேன் என்று சொன்னால் அது பொய்யாக தான் இருக்க முடியும்.

8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடிச்ச விஷயம்: நீங்கள் அதை மற்றவர்களிடம் கேட்கவேண்டும்.
பிடிக்காத விஷயம்: நான் சொல்லி மாட்டிக்கிறத்துக்கா? ;)

9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?

ஒரு பேச்சிலரை பார்த்து இக்கேள்வியினை முன்வைத்திருப்பதன் மூலம், இதன் பின்னிருக்கும் அரசியலையும், அதன் மூலம் எழுப்பப்படும் கேள்விகளையும், அதன் உள்ளீடுகளையும் நான் கடுமையாக கண்டிக்கிறேன் ( ஒரு கேள்வியாவது, ஜீவி கெட்டப்புல சொல்லணும்ல :) )

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

அவள்.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?

கருப்பு பேண்ட். ஸ்ட்ரெப்டு சட்டை.

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

எழுதிக் கொண்டிருப்பதால் நோட்பேட். இல்லையென்றால் எதிரே இருக்கும் ஒடாத அஜந்தா கடிகாரம்.

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?

கருப்பு. மாண்ட் ப்ளாங்க்

14) பிடித்த மணம்?

நிறைய. மண்வாசனை. ஹியுகோ பாஸ் பர்ப்யூம். நல்ல தக்காளி ரசம். மாம்பழம். பேரெக்ஸ். தொலைவில் அடிக்கும் ஜண்டு பாம். இன்னமும் நிறைய.

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?

பா.ரா, சொக்கன், பாலா இன்னபிறவர்கள் என தெரிந்தவர்கள் அனைவரும் எழுதிவிட்டார்கள். மற்றபடி இந்த மாதிரியான சங்கிலி விளையாட்டுகளில் எனக்கு சுவாரசியங்களில்லை. நேரடியாக தெரியவில்லையாயினும், எஸ்.ரா, கலாப்பிரியா, ராஜநாயஹம் போன்றவர்களை அழைக்க ஆசை. அவர்களை எனக்கு நேரடியாக தெரியாது என்பதால், இந்த சங்கிலி என்னளவில் என்னோடு முடிந்துவிடும்.

16) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

அனுப்பியவர் என்றென்றும் அன்புடன் பாலா. பல கருத்து வேறுபாடுகள் எங்கள் இருவருக்குமுண்டு. டிவிட்டரில் கிரிக்கெட்டிலிருந்து உலகப்பிரச்சனைகள் வரை நாங்களிருவரும் இருவேறு பாதைகள். ஆனாலும், தொடர்ச்சியாக டிசம்பரில் அவர் எழுதிய திருப்பாவை விளக்கங்கள் பிடித்தமானவை.

17) பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட். டென்னிஸ். மற்றும் ___________________ (வாத்தியார் நினைவாக கொஞ்சம் Aத்தனமான மூன்றாவது ;) )

18) கண்ணாடி அணிபவரா?

ஆமாம். 1996லிருந்து.

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?

உலக சினிமாவையும், உள்ளூர் குத்துப்பாட்டையும் வெகு சீரியஸா ரசிப்பவன். என்னுடைய ரசனைகள் படத்திற்கு ஏற்றாற்போல் மாறும். குவெண்டின் டொரண்டினோவின் ரசிகன் நான். வன்மமும், காமமும் அதிகமாய் இருப்பதால் :)

20) கடைசியாகப் பார்த்த படம்?

தசாவதாரம் - தியேட்டரில். Spring,Fall,Winter,Summer and Spring - தனி திரையிடலில். பார்ட்னர் (ஹிந்தி) - டிவியில். லீ (தமிழில்) - டிவியில்.சுப்ரமணியபுரம் - டிவிடியில்.

21) பிடித்த பருவ காலம் எது?

மழையும், மழை சார்ந்த பருவமும். காபி, டீ குடித்துக் கொண்டிருந்த காலங்களில், என் வீட்டின் பால்கனி வழியே சூடான டீயும், லேஸ் சிப்ஸுமாய் மழை பார்த்து ரசித்த காலங்கள்.

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

இப்போது புத்தகமாய் ரிச்சர்ட் தேலரின் Nudge. வலைத்தளத்தில் David J.Leinweber's Nerds on Wall Street. இதற்கு முன்னால் Booz & Allen & Co வின் The successful M&A Deals by CFOs. தமிழில் கோபி கிருஷ்ணனின் தூயோன். இதற்கு முன்பு பா.ராகவனின் “பிரபாகரன்: வாழ்வும் மரணமும்”

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?

மூடுக்கு ஏற்றாற் போல் மாறும். இப்போதிருப்பது சென்னை சூப்பர் கிங்க்ஸின் கர்ஜிக்கும் சிங்க லோகோ.

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

அதையும் வாசகர்களும், சகப்பதிவர்களும் தான் சொல்ல வேண்டும். மற்றபடி, உருப்படியான தனித்திறமையென்றால், து.கோ.வைணவக் கல்லூரியின் முதல் கானா பாடகன் :)

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நிறைய. சமூகத்தின் இரட்டை வேஷங்கள். குடும்பங்களில் நடக்கும் வன்முறைகள். குழந்தைகளின் மீதான திணிப்பு. ஊடகங்களின் பக்க சார்புகள் என நீளும்.

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

வன்முறை. அதுதான் எனக்கான கடவுள்.

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

சுவிசர்லாந்து. வெனிஸ் ஏரிகள். கொடைக்கானல் மலைச்சரிவுகள். இலங்கையின் இயற்கை சூழல். ஆலப்புழாவின் போட் வீடுகள்.

30) எப்படி இருக்கணும்னு ஆசை?

கொஞ்சமாவது மனுஷனாக

31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

பார்க்க கேள்வி எண் 9

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க

சொர்க்கம் காசிருக்கும்போது. நரகம் சுற்றிலும் இருப்பவர்கள் புரிந்து கொள்ளாதவரை.

Monday, May 18, 2009

வீரவணக்கம் - பிரபாகரன் மற்றும் ஒட்டு மொத்த ஈழத்தமிழனத்திற்கும்!



அம்மாவோடு பாசம் போனது
அப்பாவோடு அறிவு போனது
என் ‘தம்பி’ யோடு தேசம் போனது
இனி தமிழனமும் தமிழ்மானமும்
நன்றாக காற்றிலாடும்
டெல்லியின் கரவொலியிலும்,
அறிவாலயத்தின் அதிசிரிப்பிலும்
மெளனமாய் மறைந்து போகும்
எம்மக்களும், அவர் உயிர்களும்

Thursday, April 09, 2009

[ஈழம்] இதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்?

Disclaimer: இதய பலவீனம் உள்ளவர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு இந்த பதிவு ஏற்புடையதல்ல.

ஒரு புகைப்படம் 1000 சொற்களுக்கு சமம் என்றொரு பழமொழி உண்டு. கீழ்க்காணும் புகைப்படங்கள் எனக்கு மின்னஞ்சலில் வந்தவை. புகைப்படங்கள் மகா கோரமானவை.இதன் shock value விற்காக இந்த புகைப்படங்கள் இங்கே பிரசூரிக்கப்படவில்லை. இதன் பின்னிருக்கும் அடக்குமுறையும், அரசாங்க வன்முறையும் தான் இதை வெளியிட தூண்டியது.இதனை வெளியிடுதலில் வருத்தத்தினை விட கோவமும், கையாலாகதத்தனமும் தான் மிஞ்சுகிறது. மக்கள் இனி முடிவெடுக்கட்டும்.